- September 23, 2024
உள்ளடக்கம்
மனிதன் என்பவன் மற்ற எல்லா ஜீவராசிகளையும் போல இயற்கைத்தாயின் கருப்பைக்குள் இருக்கும் சிறிய அணு தான். இயற்கையின் இறுக்கமான தாக்கத்திலிருந்து மனிதன் என்றும் விடுபட்டுவிட முடியாது. விஞ்ஞானத்தாலும் அதனை சாதிக்க முடியாது. நம் உடல் இந்த பூமி மற்றும் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தையும் பொறுத்தே தன் இயக்கத்தை நடத்துகிறது.
கிரகங்களின் தாக்கம் இல்லையென்றால் நம் உடற்சுழற்சியே மாறுபட்டு விடும். அவற்றை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த நம் முன்னோர்கள் கிரகங்களின் சுழற்சிக்க்கேற்ப உடலில் ஏற்படும் மாறுபாட்டை உணர்ந்து கொண்டார்கள். கிரகங்களின் தாக்கத்திற்கு வளைந்து கொடுத்து வாழத்துவங்கினார்கள். அதன் ஒரு பகுதி தான் விரதங்கள்.
விரதங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை உண்ணாமல் இருக்கும் விரதம், பேசாமல் இருக்கும் மௌன விரதம், ஒரு நாள் முழுவதும் உப்பில்லாமல் சாப்பிடும் விரதம் போன்றவைகள் ஆகும்.
முதலில் உண்ணா விரதம் பற்றி பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த நாளின் தன்மைக்கேற்ப நீர்மமாகவோ, கூழாகவோ, அல்லது காலையில் மட்டும் உண்டு மற்ற நேரங்களில் நீர்மமாகப் பருகி வயிற்றுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் இருக்கும் விரதம்.
காரணம் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு புவி ஈர்ப்பு விசை முக்கியக் காரணம். புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் கீழ் நோக்கிய அழுத்தம் இல்லையென்றால் நம் உடற்கழிவுகள் வெளியேறவே செய்யாது. ஆக வயிற்றிலிருக்கும் உணவு செரிப்பதும், கழிவுகள் வெளியேறுவதும் புவி ஈர்ப்பு விசை சார்ந்தே இருக்கிறது.
வீட்டுப் பெரியவர்கள் முக்கியமாக விரதம் இருக்கும் நாள் ஏகாதசி. குறிப்பிட்ட இந்த நாளில் என்ன விஷேஷம் என்று தோன்றலாம். இந்த குறிப்பிட்ட நாளில் புவி ஈர்ப்பு விசை அதிகமான இருக்கும் நாளாக கருதப்படுகிறது. காரணம் சூரியனிலிருந்து சந்திரன் அதிக தூரம் விலகி வரும் நாட்களில் பூமியில் அதன் ஈர்ப்பு சக்தி அதிகரிப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.
உதாரணமாக அமாவாசையிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி தூரம் சந்திரன் சூரியனிலிருந்து விலகுகிறது. அவ்வாறு தினந்தோறும் பிரிந்து அமாவாசையிலிருந்து 11 ஆம் நாளான ஏகாதசியன்று சூரியனிலிருந்து சந்திரன் 132 டிகிரியில் விலகியிருப்பதால், அந்நாளில் பூமியில் குறிப்பிட்ட அளவு புவி ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது என்கிறார்கள்.
ஆக புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடலில் ஜீரண மண்டலம் அதிக கீழ் நோக்கிய விசையால் ஈர்க்கப்படும். உண்ணும் உணவை செரிமானம் செய்யும் பொருட்டு அதிகமான விசையுடன் இயங்கும். அந்த நாளில் நாம் அதிகமாக உணவு உட்கொண்டால் ஈர்ப்பு விசையின் வேகத்திற்கு உணவு செரிக்காமல் அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம். வாயுத்தொல்லைகள் பெருகலாம்.
என்றைக்கும் ஒரே மாதிரியான உணவு உட்கொண்டாலும் ஒரு சில நாட்களில் நம்மை அறியாமல் வயிற்றுக்கு உபாதைகள் நேர்வதை நில நேரங்களில் நாம் உணரமுடியும். வித்தியாசமாக எதுவும் சாப்பிடவில்லை, ஆனாலும் என்னவோ வயிறு சரியில்லை என்று உணவைத் தவிர்க்க நேரிடும். காரணம் இது போன்ற சில நாட்களை நாம் கவனத்தில் கொள்ளாமல் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக உணவை உள்ளே தள்ளுவதால் நாளடைவில் உண்டாகும் வயிற்றுக் குறைபாடாக அது தெரியவருகிறது.
ஆகையால் நம் செரிமான மண்டலங்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கும் விதமாகவே ஏகாதசி போன்ற நாட்களில் உண்ணா நோன்பாகவோ அல்லது நீர்மமாகவோ, கூழ்மாமாகவோ மட்டும் உணவருந்தி வயிற்றையும் செரிமான உறுப்பையும் பாதுகாக்கும் ஏற்பாட்டை நம்முன்னோர்கள் செய்து வந்திருக்கிறார்கள் எனலாம். இயந்திரங்களை அவ்வப்பொழுது கழுவி சர்வீஸ் செய்வது போலே வயிற்றுக்குள் உணவு போடாமல் கழுவி செய்யப்படும் சர்வீஸ் எனக்கொள்ளலாம்! உடலும் ஒரு இயந்திரமே! அதற்கும் முறையான சர்வீஸ் தேவை. அத்தகைய ‘periodical service’ தான் உண்ணா விரதங்கள்!
மௌன விரதம் – மனதுக்கு மருந்து:
“வாயை மூடு!” என்று சில லொடலொடப்பைகளை நாம் கடிந்து கொள்வதுண்டு. பேசாமல் இருப்பது என்பது அவ்வளவு கஷ்டமான வேலையா?
ஆம். பேசாமல் இருக்க முடியாது. ஏதாவது காரணத்திற்காக, காரியத்திற்காக நாம் பேசிக்கொண்டே இருப்பது அவசியம். ஆனால் நாம் காரியத்திற்காகவோ அல்லது அவசியத்திற்காகவோ மட்டும் தான் பேசுகிறோமா? இல்லை.
காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஏன் தூக்கத்தில் கூட ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். காரணம் பேசுவது என்பது வெறும் விஷயத்தை வார்த்தைகளால் பரிமாறிக்கொள்ளும் ஒரு நிகழ்வாக இருப்பதில்லை. பேசுவதென்பது உணர்ச்சிகளின் வடிகாலாக இருக்கிறது. உணர்ச்சிகளின் உந்துதல் பேசினால் தீர்ந்துவிடுகிறது. கோபம், பாசம், காதல், காமம் என்று பல விஷயங்களை பேசித் தணிக்கும் குணம் நம்மிடயே இருக்கிறது.
உணர்ச்சியின் உந்துல் எண்ணங்களின் உற்பத்தியால் உண்டாகிறது. எண்ணங்கள் மனத்தில் தொடர்ந்து தோன்றுவது உணர்வுப்பூர்வமாக நம் மனதில் ஓர் உந்துதல் ஏற்படக் காரணமாகிறது. அந்த உந்துதலே எண்ணங்களை வார்த்தைகளால் வெளிப்படுத்தச் செய்கிறது. மௌன விரதத்தின் மூலம் வார்த்தைகள் வெளிப்படுவது முதலில் தடுக்கப் படுகிறது. அவ்வாறு வார்த்தைகளைப் பேசாத சூழலில் எண்ணங்கள் மட்டும் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும். அப்போது நம்மையறியாமல், அந்த எண்ணங்களின் மீது நாம் கவனத்தைச் செலுத்துகிறோம். அவற்றைப் புரிந்து கொள்ள முயல்கிறோம். பேச முடியாத சூழலில் எண்ணங்கள் தோன்றுவது நமக்கே ஒரு உபத்திரவமாக இருக்கத் துவங்கும். அதனால் எண்ணங்கள் உண்டாவதை நாமே தடுத்து நாம் அப்போது செய்து கொண்டிருக்கும் வேலையிலேயே முழுக்கவனத்தைச் செலுத்தத் துவங்குவோம்.
இதனால் நம் மனதில் எண்ணங்கள் உற்பத்தியாவது நம்மாலேயே தடுக்கப்படுகிறது. எப்போது நம் எண்ணங்களை நாம் கட்டுப்படுத்தத் துவங்குகிறோமோ அப்போதே நம் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. விழித்திருக்கும் போதே தியானம் செய்யும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறோம். காரணம் எண்ணங்களால் அலைக்கழிக்கப்படாத சூழலில் மனம் ஒருநிலைப் பட்டிருக்கும். அதுவே தியானத்தின் முதல் படி.
எண்ணங்கள் இல்லா மனது அலைகளில்லா ஆழ்கடல் போன்றது. அச்சூழலில் மட்டுமே ஆழ்மனம் விழித்திருக்கும். ஆழ்மனம் வெளிமனத்துடன் ஒன்றிச் செயலாற்ற சலனமற்ற மனமே உதவும். நல்ல நினைவாற்றால் பெருகவும் செய்யும் காரியங்களில் நேர்த்தி கிடைக்கவும் இந்த சலனமற்ற மனம் பயன்படும்.
அமைதியான மனத்துடன் நாம் இருக்கும் போது நம் சுவாசம் மிகவும் சீராக இருக்கும். சீரான சுவாசம் ரத்த ஓட்டத்தையும் சீராகக்கும். இதனால் ரத்தக் கொதிப்பு உண்டாகாமல் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க மௌனவிரதம் வகை செய்கிறது. பொதுவாக எல்லா வியாதிகளுமே சுவாசத்தின் சமச்சீர் குலைவிலிருந்து தான் துவங்குகிறது.
உடல் பாகங்கள் அனைத்திற்கும் சமமான அளவு மூச்சின் வேகமும் ரத்தத்தின் ஓட்டமும் தொடர்ந்து இருக்குமேயானால், உடல் பாகங்கள் அனைத்திற்கும் சீரான ஆக்ஸிஜன் கிடைக்கும். நரம்பு நாளங்கள் உயிர்ப்புடன் இருக்கும். அதனால் வியாதிகள் உண்டாவது குறைவுபடும். நம் சுவாசம் தான் ரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. எனவே சுவாசத்தை சீராக வைத்திருந்தால் ரத்த ஓட்டமும் சீராகி உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இவற்றை உணர்ந்தே பேசாமல் இருப்பதன் மூலமாக மனம் சலனமடைவதைத் தடுத்து உணர்வுகளைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் சுவாசத்தையும் ரத்த ஓட்டத்தையும் சீர்படச் செய்து உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதை ஒரு பயிற்சியாகவே மேற்கொண்டனர் நம் வீட்டுப் பெரியவர்கள்.
‘பஜகோவிந்தம்‘ பாடலில் ஆதிசங்கரர் இவ்வாறு எழுதுகிறார்:-
“பணம் சம்பாதிக்க முடிகிற காலம்வரை உன்னோடு அனைவரும் சேர்ந்திருப்பர் உடல்நடுங்கி ஆரோக்கியம் இல்லாத வயோதிகம் வந்த பின்னே உன்னைப் பார்த்துக் கொள்ளவோ உன்னோடு ஒருவார்த்தை பேசவேனும் யாரும் இருக்கப் போவதில்லை, எனவே கோவிந்த நாமம் பாடு மூடனே கோவிந்த நாமம் பாடு” என்பார் சங்கரர்.
ஆக வயோதிக காலத்தில் நாம் கண்டிப்பாக பேச ஆளில்லாமல் தனிமையில் இருப்போம். அத்தகைய சூழலில் பேசியே தீரவேண்டும் என்ற உந்துதலை தடுக்கவும் வயோதிகத்தை எதிர்கொள்ளவும் மௌனவிரதப் பயிற்சி பெரிதும் உதவுகிறது.
எண்ணங்களை கட்டுப்படுத்தவோ, மௌனமாக இருந்து மனதை அமைதியாக வைத்திருக்கவோ அறியாமல் வயோதிகத்தில் பாடுபட்டவர்களும் உண்டு.
மௌனம், விரதம் மட்டுமல்ல. அது ஒரு தவம். பெரியோர்கள் நமக்களித்த வாழ்க்கைப் பாடம்!
Also, read